எஸ்.என்.எம்.சுஹைல்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர்களில் கடந்த 7 வருடங்களாக முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு அளப்பரியது என கூறினால் அது பிழையாகாது. அவரின் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பனர்களின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இதனை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
1990 ஆம் ஆண்டு முதல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் முஜீப் 2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று பிரதிநிதித்துவ அரசியலில் தடம்பதித்தார். இரண்டு தடவை மேல்மாகாண சபை உறுப்பினராகவும் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் விடயத்தில் போராடி குரல் கொடுத்து மிகக் காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சபை செயற்பாடுகளை மையப்படுத்தி manthri.lk இணையத்தளம் மேற்கொள்ளும் தரப்படுத்தலின் அடிப்படையில் 2015 தொடக்கம் 2020 வரையிலான 8 ஆவது பாராளுமன்றத்தில் இவர் 23 ஆவது இடத்தை பெற்றிருந்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இவரே முதன்மை இடத்தை பெற்றிருந்தார். 414 சபைக் அமர்வுகளில் இவர் தான் கூடுதலான கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். அந்தவகையில், 398 கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.
2020 ஆகஸ்ட் தொடக்கம் 2022 ஒக்டோபர் வரை 9 ஆவது பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்த முஜிபுர் ரஹ்மான் 12 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்கிறார். 204 கூட்டங்களில் 196 இல் அவர் கலந்துகொண்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான இவர் சிலகாலம் தனிமைப்படுத்தப்பட்டமையால் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாமல் போனதையும் இங்கு நினைவூட்டலாம். இம்முறையும் முஸ்லிம் உறுப்பினர்களில் இவரே முதலாம் நிலையில் இருக்கின்றார். (வரவு செலவு திட்ட உரையில் அவர் பங்குபற்றியிருந்தார். அவ்விடயங்கள் இன்னும் உள்வாங்கப்படாத நிலையில் இந்த தரவு வெளியாகியிருந்தது)
அத்தோடு, அரச நிர்வாகம், பாராளுமன்ற விவகாரம், நிதி, பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் இவர் கூடுதலான அக்கறையுடன் செயற்பட்டிருப்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மாறுபட்ட அரசியல் நிலைமைகள் உருவாகியுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெளியானதையடுத்து கொழும்பு மாநகர சபையை எவ்வாறாயினும் கைப்பற்றியாக வேண்டும் என்ற நிலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி, தற்போதைய சூழ்நிலையில் முஜிபுர் ரஹ்மானால் மாத்திரமே கொழும்பை வெற்றிகொள்ள முடியும் என தீர்மானித்தது.
பீ.டீ.சிறிசேன மைதானத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற அக்கட்சியின் கூட்டமொன்றில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் களமிறக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதையடுத்து ஐ.ம.ச. வேட்பாளர் தேர்வில் களமிறங்கியது. இந்நிலையில், கொழும்பு மாநகர வேட்பாளர் விவகாரம் சூடுபிடிக்க அதே நளீன் பண்டார மீண்டும் முஜிபுர் ரஹ்மானின் பெயரை பிரேரித்தார். இந்நிலையில் கட்சி ஏகமனதாக முஜிபுர் ரஹ்மானை மேயர் வேட்பாளராக அறிவித்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டமையானது முஜிபுர் ரஹ்மானின் பிரதிநிதித்துவ அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஏற்கனவே, 1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற தேர்தல்களில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி, பொதுஜன முன்னணி என்பவற்றில் தேர்தலில் களமிறங்கிய அவரால் வெற்றிபெற முடியவில்லை.
2007 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியில் உள்வாங்கப்பட்டு கொழும்பு மாநகர சபை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் முஜீப் இடம்பிடித்தார். அவரின் துரதிஷ்டமோ, என்னவோ குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அவர் கொழும்பு மாநகர சபை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்ட நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முஜிபுர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சமூக மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவரை திட்டமிட்டு கொழும்பு மாநகருக்குள் முடக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
காரணம் முஸ்லிம் அரசியல் அரங்கு மாத்திரமன்றி, கொழும்பு அரசியலிலும் தேசிய அரசியலிலும் முஜிபுர் ரஹ்மான் சிறந்த அரசியல் தலைமையாக நோக்கப்பட்டு வந்தார். முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழர்கள், சிங்களவர்கள் மத்தியிலும் முஜிபுர் ரஹ்மான் பிரபலமடைந்திருந்தார். இவரின் அசுர வளர்ச்சி கட்சி உள்மட்டத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவர் திட்டமிடப்பட்டு இவ்வாறு கொழும்பு மாநகர வேட்பாளராக களமிறக்கும் சதிகள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழத்தான் செய்கிறது.
இது இப்படியிருக்க, கொழும்பு மாநகர மேயர் பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் பதவியை விட அதிகாரமிக்கது. இதனால், கொழும்பு மேயர் பதவி பலரின் இலக்காக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருக்கும் பிரபல முஸ்லிம் அரசியல்வாதியொருவர் குறித்த பதவியை இலக்கு வைத்து மாளிகாவத்தை பகுதியில் தனது தேர்தல் வாக்கையும் பதிவு செய்திருந்ததாக தெரியவருகின்றது. அத்தோடு, கொழும்பு நகருக்குள் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் முஜிபுர் ரஹ்மான் மிகவும் பிரபலமானவர். இங்கு இன்னொரு முஸ்லிம் அரசியல்வாதி காலூன்றுவதை அவரல்ல, வேறு எந்த அரசியல்வாதியாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே. ஆக, முஜிபுரும் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் உயர்பதவியொன்றை பெற்றுக்கொள்வதற்கும் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்குமாக மேயர் பதவியை பெற்றுக்கொள்ளும் தேர்தல் களத்தில் களமிறங்கியிருப்பார் என்றே கூற வேண்டும்.
தேர்தலுக்கு நிதியில்லை, இந்த நிதியொதுக்கீட்டால் நாடு இன்னும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதியமைச்சு கூறியதால் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த வார பாராளுமன்ற அமர்வின்போது உள்ளூராட்சி தேர்தல் விவகாரம் சூடுபிடித்தது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றுக்கு உள்ளும் வெளியேயும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது. பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வந்திருந்த ஜனாதிபதியிடம் உள்ளூராட்சி தேர்தல் குறித்து எதிரணியினர் கேள்விகளை எழுப்பி வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவங்கள் பலவும் இடம்பெற்றன.
இந்நிலையில், உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிப்பானது உத்தியோகபூர்வமற்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ”தேர்தலை பிற்போடவில்லை. பிற்போடுவதற்கு தேர்தல் ஒன்று இல்லை” என்றும் கூறினார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வு மிகவும் சூடாகவே இருந்தது.
இந்நிலையில், “பாராளுமன்றத்தில் எம்.பி. பதவியில் இருந்து இராஜினாமா செய்யவேண்டாம் என்று தான், முஜிபுர் ரஹ்மான் எம்.பி.க்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
அத்தோடு, “முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்துக்கு நான்தான் கொண்டுவந்தேன். அவரை பலிக்கடாவாக ஆக்கப்போகின்றனர் என்பது எனக்குத் தெரியும். முஜிபுர் ரஹ்மானை பாராளுமன்றத்தில் வைத்துக்கொள்வதற்கு நான் கடுமையாக முயற்சித்தேன் அதனை விட ஒன்றையும் நான் கூறவிரும்பவில்லை” என்றும் ஜனாதிபதி கூறினார்.
எனினும், ஜனாதிபதியின் இந்த கூற்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முற்றாக மறுத்துள்ளார்.
ஜனாதிபதி பாராளுமன்றில் உரையாற்றி சற்று நேரத்திலேயே ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட முஜிபுர், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென எனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. அவர் பொய் சொல்கிறார்” என திட்டவட்டமாக கூறினார்.
மேலும், மக்களின் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுகிறார். உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அனுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். எனக்கு அமைச்சுப் பதவியை பொறுப்பெடுக்குமாறு 2 முறை ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார். எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள். இதைத்தவிர ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமோ எமக்குள் இடம் பெறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார் முஜிபுர் ரஹ்மான்.
இதற்கு எந்த பதிலும் ஜனாதிபதியிடமிருந்து வெளியாகவில்லை.
இதனிடையே, கடந்த வார பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, சபையிலிருந்து திட்டமிட்டு முஜிபுர் ரஹ்மானை வெளியேற்றிவிட்டதாக கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை சாடியிருந்தார். எனினும், இவ்வாறு சதி செய்வதற்கு தனக்கு எந்த தேவையும் இல்லை என குறித்த உறுப்பினர் உடனே, ஒழுங்கு பிரச்சினை எழுப்பி கூறியிருந்தார்.
எது எவ்வாறு இருப்பினும், பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த முஸ்லிம் சமூகத்தின் குரலொன்று இல்லாத வெற்றிடத்தை எதிர்வரும் நாட்களில் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்.
-நன்றி Vidivelli-
கருத்துரையிடுக