கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
வைசியராக இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் வணிகத்தையே வாழ்வாதாரமாகக்கொண்டு வாழ்ந்தது மட்டுமல்லாமல் அவர்களின் மதபோதனைகளும் வணிகத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றதனால் அரசியல் சிந்தனையும் அதே பாணியிலே தொடர்வதில் ஆச்சரியமில்லை. இன்றைய அரசியற் சூழலிலும் அதே சிந்தனைதான் முஸ்லிம் தலைவர்களையும் வாக்காளர்களையும் ஆட்கொண்டுள்ளதை மறுக்க முடியாது. அந்தச் சிந்தனையை விபரிப்பதுடன் அதன் விளைவுகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இஸ்லாமும் வணிகமும்
இஸ்லாத்துக்கும் வணிகத்துக்குமுள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. உதாரணமாக, இறைதூதரே வணிகத்தில் ஈடுபட்டவர். அவரது முதல் மனைவி ஒரு வியாபார ஸ்தாபனத்தின் தலைவி. குறைஷியர்கள் வணிகர்கள். மக்கா ஒரு வணிகத்தலம். வருடத்தில் ஒருமுறை அது ஒரு மாபெரும் கடை வீதியாக மாறும். அந்த நாட்களில் அந்த மைதானத்துக்குள் சண்டைகள் போடுவதற்குத் தடை. ஏனெனில் அது வர்த்தகத்தைப் பாதிக்கும்.
இவ்வாறான ஒரு வணிகச் சூழலிலே இறங்கிய ஒரு மார்க்கம் அந்தச் சூழலுக்கேற்றவாறு அதன் போதனைகளையும் அறிமுகப்படுத்துவது அந்த மார்க்கம் பரவுவதற்கு இலகுவாக இருக்காதா? எனவேதான் குர்ஆனிலும் வணிகம் தொடர்பான வார்த்தைகளும் உதாரணங்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் விபரிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஏராளமான ஆராய்ச்சி நூல்கள் ஐரோப்பிய மொழிகளிலும் ஏன் அரபு மொழியிலும்கூட வெளிவந்துள்ளன. விரும்புவோர் அவற்றைப் படித்தறியலாம்.
இலங்கையில் இஸ்லாமிய
மதபோதனை
‘அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். ஆகிறம் நிச்சயம். இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமில்லை. நல்ல அமல்களைச் செய்துகொண்டு சுவர்க்கம்போக வழிதேடுங்கள். அந்த அமல்களாவன கலிமாவைச் சொல்லி ஈமான் கொள்ளுதல், ஐவேளைத் தொழுகை, றமழானில் நோன்பு, ஏழை வரி, ஹஜ் ஆகிய கடமைகள் ஐந்தும் குர்ஆனை ஓதுவதும் நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி நடப்பதுமாகும். நீங்கள் செய்த நன்மைகளை தராசின் ஒரு தட்டிலும் தீமைகளை இன்னொரு தட்டிலும் போட்டு எந்தத்தட்டு தாழ்வாகப்பணியுமோ அதன்படி அல்லாஹ் உங்களை சுவர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்புவான்’. இந்தச் சுருக்கத்தைச் சுற்றியே எல்லா மதபோதனைகளும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்தன. இந்தப் போதனையில் இறைவனையே ஒரு வியாபாரியாக மாற்றிவிட்டதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். ஆகவே, முஸ்லிம் பக்தர்களும் பள்ளிவாசல், குடும்பம், தொழில் என்ற மூன்றையும் சுற்றியே தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இந்தப் போதனையில் சமூகத்தைப்பற்றிய சிந்தனை, நாட்டைப் பற்றிய சிந்தனை, கலை ஆர்வம், அரசியல் ஈடுபாடு, ரசாஞானம் என்பவற்றிற்கு இடமுண்டா? இவ்வாறு தாமும் தம்பாடும் என்று வாழ்ந்த ஒரு சூழலிற்தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து ஜனநாயக ஆட்சி அறிமுகமானது. அதன் பிறகு நடந்ததென்ன?
இராமன் ஆண்டாலென்ன
இராவணன் ஆண்டாலென்ன?
ஆகிறத்தைப்பற்றியும் சுவர்க்கம், நரகத்தைப்பற்றியும் மௌத்தைப்பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டு வாழ்ந்த ஒரு வைசியர் இனம் அரசியலையும் வியாபாரக் கண்கொண்டே நோக்கியதில் வியப்பில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமது தொழிலுக்கும் மார்க்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் ஆண்டால் அதுவே போதுமானது என்றபோக்கிலேயே அரசியலை முஸ்லிம்கள் அணுகினர். அதைத்தான் மதபோதகர்களும் சரிகண்டனர்.
பள்ளிவாசல் கட்டுவதற்கும், மதரசாக்களை அமைப்பதற்கும், ஹஜ் கடமையை நிறைவேற்றவும், அனுமதிகளை வழங்கி, வியாபார அபிவிருத்திக்கும் தடையில்லாமல் ஓர் அரசாங்கம் அமையுமானால் அந்த அரசுக்கு ஆதரவு வழங்குவதே சிறந்தது என்ற ஒரு நியதி சமூகத்தில் உருவாகிற்று. இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன, இருவருமே காபிர்கள். ஆதலால் மேற்கூறிய தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கே எங்கள் வாக்கு என்ற ஓர் அரசியல் சூத்திரம் முஸ்லிம்களிடையே வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் அந்தச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே இயங்கினர்.
வியாபார அரசியலும் விபச்சார
அரசியலும்
1980க்குப் பின்னர் முஸ்லிம் கட்சியொன்று உருவாகும்வரை மேலே விபரிக்கப்பட்ட வியாபார அரசியல்தான் முஸ்லிம் சமூகத்துக்கென சில சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. இன்றைய முஸ்லிம் பாடசாலைகளும் முஸ்லிம் மகா வித்தியாலயங்களும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளும் அதற்குச் சிறந்த உதாரணங்கள். சிங்கள தமிழ் இனங்களுக்கிடையே ஏற்பட்ட இனவாத விரிசல் முஸ்லிம்களை இடைநடுவே நுழையவிட்டமை முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து அவர்களின் வியாபார அரசியலை இலாபகரமானதொன்றாக ஆக்கிவிட்டது. ஆனால் ஒன்றை மட்டும் வலியுறுத்த வேண்டும். அதாவது அந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் பிரதிநிதிகள் தமது சுயநலத்தை முன்வைத்து அவற்றுக்காகப் பாடுபடவில்லை. அவர்களின் சேவைகளை இன்றைய முஸ்லிம் சந்ததி மறந்துவிட்டமையும் இச்சமூகத்தின் வியாபாரக் கலாச்சாரத்தின் ஒரு பிரதிபலிப்பே. சிந்திப்பவர்களுக்கு அந்த உண்மை விளங்கும்.
1980க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம் வியாபார அரசியலை விபச்சார அரசியலாக்கி விட்டது. ஒரு விபச்சாரிக்கு யாருடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. யார் பணம் தருவாரோ அவருடன் உறவு கொள்வதே ஒரு விபசாரியின் ஒரே நியதி. அதைப்போலவே 1980க்குப் பின்னர் முஸ்லிம் கட்சிகளை உருவாக்கி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்கள் எந்தக் கட்சியுடன் இணைந்து, எந்தச் சின்னத்தில் போட்டியிட்டு என்ன தந்திரத்தைப் பாவித்து நுழைந்தாலும் அவர்களின் குறிக்கோள் எதிரணியில் அமர்வதல்ல. அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் ஆளுனர்களாகவும் பதவிபெற்றுப் பணம் சம்பாதிப்பதே. அதற்காகத் தம் இனத்தை எந்த ஒரு ஆட்சிக்கும் ஈடுவைக்கும் அரசியல் தலைமைகளை விபச்சாரிகள் என்று கூறுவது தவறா? அவர்களுக்கு வேண்டியது பதவியும் பணமும். அதற்காக சமூகத்தையும் ஏன் சந்தர்ப்பம் நிர்ப்பந்தித்தால் மார்க்கத்தையும்கூட ஈடுவைக்க இவர்கள் தயார். முஸ்லிம்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவோம் என்று பறை அடித்தவர்கள் இதுவரை போராடிப்பெற்ற ஏதாவது ஓர் உரிமையை எடுத்துக் கூறுவார்களா? அதுதான் போகட்டும். அந்த உரிமைகள் எவை என்ற பட்டியலையாவது அவர்களால் வெளியிட முடியுமா?
முஸ்லிம்களின் உரிமைகளா
பிரச்சினைகளா?
எந்த ஒரு ஜனநாயக ஆட்சியிலும் ஜனநாயகத்தின் விழுமியங்களை அரசியல் யாப்பு கட்டிக் காக்குமானால் எந்தவோர் இனத்துக்கும் அல்லது சாதிக்கும் அல்லது மதத்துக்கும் தனிப்பட்ட உரிமைகளென்று எதுவும் இருக்க முடியாது. ஓர் அப்புஹாமிக்கோ அருளப்பனுக்கோ ஆறுமுகத்துக்கோ இல்லாத உரிமை அப்துல்லாவுக்கு இருக்க முடியுமா? மற்றவர்களுக்குள்ள உரிமைகள் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுமானால் போராட வேண்டியது முஸ்லிம்களுக்கு உரிமை கேட்டல்ல. ஏனெனில், அப்போராட்டம் இனவாதமாக மாறும் ஆபத்து உண்டு;. ஆகவே ஜனநாயக உரிமைகளை கட்டிக்காக்கும் போராட்டமாக அது மாறவேண்டும். அந்தப் போராட்டத்துக்கு முஸ்லிம் கட்சியென்ற ஒன்று தேவை இல்லை.
இந்த நாட்டிலே ஜனநாயகம் இல்லை. அது இருக்க வேண்டிய இடத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் குடிகொண்டிருக்கிறது. அதுதான் ஒரு புதுமையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கி முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் சகல சிறுபான்மை இனங்களுக்கும் எதிரியாக மாறியுள்ளது. இதுதான் இன்றைய தலையாய பிரச்சினை. அந்த இனவாதமே கடந்த ஏழு தசாப்தங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது. அந்த இனவாதத்தை ஒழிக்கவும் ஜனநாயகத்துக்காகப் போராடவும் முஸ்லிம் கட்சிகளென்ற ஒன்று தேவையா? தேவையென்றால் அந்த அரசியல் கணக்கு தப்பானது என்பதைத்தான் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
அமைப்பு மாறாமல்
பிரச்சினைகள் தீராது
முஸ்லிம்களுக்கு நிலப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, வறுமைப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் உண்டு. அவற்றை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தப் பிரச்சினைகள் மற்ற இனங்களுக்கு இல்லையா? முஸ்லிம்களுக்கு மட்டும்தான் உண்டு என்பதுபோல் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்வது அவர்களும் இனவாதத்தை வளர்த்து அதன் வெப்பத்திலே கூதல் காய்வதற்காக என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். ஒரு இனவாதத்துக்கு மருந்து இன்னொரு இனவாதம் என்று கருதினால் இந்த நாட்டு மக்களுக்கு என்றுமே விடிவு காலம் வராது. முஸ்லிம்களின் பிரச்சினைகளும் என்றுமே தீரப்போவதில்லை. அதைத் தீர்க்காமல் வைத்திருந்தாற்தான் முஸ்லிம் தலைமைத்துவங்களும் அந்தப் பல்லவியையே பாடிக்கொண்டு தேர்தல் நாடகம் நடத்தலாம். இதுதான் கடந்த நாற்பது ஆண்டுகால முஸ்லிம் அரசியல்.
அமைப்பை மாற்ற சந்தர்ப்பம் தேவை
முதலில் இந்த நாட்டைப் பீடித்துள்ள பேரினவாத அரசியல் கலாச்சாரத்தையும் அதற்குப் பக்கபலமாக இருக்கும் அரசியல் யாப்பையும் நீக்கவேண்டும். அதனை உணர்ந்துதான் கடந்த வருடம் இளைய சமுதாயமொன்று அமைப்பை மாற்று என்ற கோரிக்கையை முன்வைத்து காலிமுகத்திடலில் கிளர்ந்தெழுந்தது. அந்த மாற்றத்தை இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான அங்கத்தவர்கள் செய்யமாட்டார்கள்என்பதை அறிந்துதான் அந்த 225 அங்கத்தவர்களையுமே வேண்டாமென்றும் குரலெழுப்பினர். அந்தக் கிளர்ச்சியை முறியடித்து அதன் தலைவர்களையும் சிறையில் தள்ளியபின் ரணிலின் தலைமையில் அதே இனவாதக் கும்பல் ஆட்சியைத் தொடர்கிறது.
இந்த ஆட்சியையும் அதன் அரசியல் கலாச்சார அமைப்பையும் மாற்றுவதற்கு மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றக்கூடிய ஓர் அணியினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு வெள்ளோட்டமாகவே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஊராட்சிமன்றத் தேர்தலை கருதவேண்டும். ஆனால் அதை நடைபெறாமல் தடுக்கும் முயற்சியில் ரணிலின் ஆட்சி இறங்கியுள்ளது. அந்த முயற்சியை எதிர்த்து மக்கள் சக்தி ஒன்று திரள்கிறது. அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை. நாட்டில் நடைபெறும் அரசியல் மாற்றங்களின் பங்காளிகளாக முஸ்லிம்கள் மாறவேண்டுமே ஒழிய வெறும் பார்வையாளர்களாக இருந்து கொண்டு முஸ்லிம் தலைவர்களின் பின்னால் ஓடுவதால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தலைவர்களின் செல்வம்தான் பெருகும்.
முடிவாக, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் போட்ட அரசியல் கணக்கு தப்பானது என்பதையும் புதிய கணக்கொன்று அவசியம் என்பதையும் முஸ்லிம் புத்திஜீவிகளாவது உணர்ந்து செயற்படுவார்களாயின் அதுவே இக்கட்டுரையின் வெற்றி.
- Vidivelli பதிவிலிருந்து -
கருத்துரையிடுக