பாதுகாக்கப்பட வேண்டிய முஸ்லிம் தனியார் சட்டம் - ஓர் அலசல்!

 (எம்.எஸ்.தீன்) 


ஒரு சமூகத்தின் மொழி மற்றும் மதத்சுதந்திரமும், கலாசாரத்தைப் பாதுகாத்து அதன்படி நடந்து கொள்வதும் முக்கியமானதாகும். எந்தவொரு சமூகம் தமது மொழியையும், மதத்தையும், கலாசாரத்தையும் இழந்து நிற்குமோ அச்சமூகம் விரைவாக அழிந்து போய்விடும். 


ஆதலால், இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமது மொழி, மதம், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக முஸ்லிம்களை பொறுத்தவரை மதத்தின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலாசாரத்தை பின்பற்றி நடப்பது கட்டாயமாகும்.

இலங்கையில் முஸ்லிம்களின் மதவிழுமியங்களையும், கலாசாரத்தையும் இல்லாமல் செய்வதற்கு நீண்ட காலமாக பேரினவாதிகளினால் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது கூட முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது பெரும்பாலும் முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து போன்றவற்றினுடன் தொடர்புடையதாகும். அவை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. முஸ்லிம்களின் தனியார் சட்டம் என்பது அந்நியர்களின் ஆட்சிக்காலம் முதல் இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. 

இந்த தனியார் சட்டமானது இலங்கையின் அரசியல் யாப்புக்கு எந்தவகையிலும் முரண்பட்டதாக இருக்கவுமில்லை. ஆயினும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள ஒரு சில குறைபடுகளை நிவர்த்தி செய்வதை முஸ்லிம்களும் ஏற்றுள்ளார்கள். 

ஆனால், முஸ்லிம்களின் கலாசாரம், மதவிழுமியங்களின் அடிப்படையில் திருமணம் மற்றும் விவாகரத்து போன்றவற்றை கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட காதி நீதிமன்ற நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதனை முழுமையாக அனுமதிக்க முடியாது. 

மேலும், பலதார திருமணத்திற்கு தடைவிதிப்பது இஸ்லாமியத்திற்கு எதிரானதாகும். புலதார திருமணத்திற்கான நிபந்தனைகளை கடுமையாக்கலாம். ஆனால் அதனை முற்றாக தடுப்பது என்பது முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தை தடை செய்யும் ஒன்றாகும். 

அத்தோடு திருமண வயதாக ஆகக் குறைந்து 18 வயதாக இருக்க வேண்டுமென்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புக் காட்டவில்லை. மேலும், முஸ்லிம்களின் தனியார் சட்;டத்தில் காணப்படும் குறைகளை நிபர்த்தி செய்வதற்கு முஸ்லிம் அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். 

அதேவேளை, ஒரு சில முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் காணப்படும் குறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை மாற்ற முடியாது என்று பிடிவாதம் காட்டுவதனை தவிர்க்க வேண்டும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. பொருளதாரம் மிகவும் மோசமான வகையில் வீழ்ந்துள்ளது. 

இதற்கு அரசியல்வாதிகளினதும், உயர் அதிகாரிகளினதும் ஊழல் நடவடிக்கைகள் பிரதான காரணமாகும். அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான சட்ட மூலங்களில் உள்ள குறைபாடுகளை இல்லாமல் செய்ய வேண்டும். 

அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதன் பின்னணியில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளும், இனவாத ஒடுக்கு முறையுமே இருக்கின்றன. 

முஸ்லிம் தனியார் சட்டம் ஒரு போதும் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு எதிரானதல்ல. ஊழல் மோசடி நடவடிக்கைகளுக்கு துணையாக அமையவில்லை. ஆனால், இலங்கையில் உள்ள சட்ட மூலங்களில் உள்ள ஓட்டைகளின் ஊடாக ஊழல் செய்வதவர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். இதனால், நாட்டின் பொருளாதரத்தை ஒரு சிலர் சுரண்டி எடுத்து கோடிஸ்வரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஆகவே, இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதனை செய்யாது முஸ்லிம் தனியார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செய்றபடுவது இனவாத நடவடிக்கை மாத்திரமில்ல அரசியல் நோக்கத்தையும் கொண்டது.

இன்று நாட்டில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் சிங்கள அரசியல்வாதிகளின் இனவாத நடவடிக்கைகளையும், அவர்கள் அரசியல் தேவைக்காக மாத்திரமே அதனை பயன்படுத்திக் கொண்டார்கள். நாட்டு மக்களை தமது அரசியல் தேவைக்காக இனவாதம் பேசி மக்களை பிரித்து வைத்துள்ளார்கள் என்று புரிந்து வைத்துள்ளார்கள். 

சிறுபான்மையினரின் உரிமைகளை வழங்க வேண்டுமென்றும், பயங்கரவாத தடைச் சட்;டம் நீக்கப்பட வேண்டுமென்றும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் அரசியல் வெற்றிக்காக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குதல் நடவடிக்கைகள் என்பதனையும் தெளிவாக விளங்கியுள்ளார்கள். 

இப்போது மக்கள் நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிவாகளை கைது செய்ய வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்காக இறுக்கமான சட்ட மூலங்களை நிறைவேற்றப்பட வேண்டும். போதைவஸ்த்து பாவனையில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்திடம் பல்வேறுபட்ட வகையில் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அரசாங்கம் அவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதுமட்டுமன்றி முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருப்பவர்கள் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்ற மேற்படி விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டுமென்று குரல் கொடுப்பதில்லை.

சிறுபான்மையினரின் உரிமைகளில் பலவற்றை பறித்துக் கொண்டது போதாமல் மீதமாக இருக்கின்ற உரிமைகளையும் பறிக்க வேண்டுமென்று தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு இனத்தின் நிம்மதியை கெடுத்து தாம் சந்தோசமாக வாழலாமென்று திட்டமிட்டவர்கள் முழு நாட்டையும் நிம்மதியற்றதாக மாற்றியுள்ளார்கள். 

ஆகவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள் முஸ்லிம தனியார் சட்டத்துறையில் உள்ள குறைபாடுகளை நிபர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். அத்தோடு முஸ்லிம் தனியார் சட்டத்தை பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

தற்போதைய நிலைமையில் இந்தச் செயற்பாடுகளில் அனைத்துதரப்பினருமே ஆர்வமற்றவர்களாக மாறியிக்கின்றார்கள். அவ்வாறான நிலைமைகள் நீடிப்பதானது, சமுகத்தின் எதிர்கால இருப்பினை கேள்விக்குட்படுத்தக்கூடிய ஆபத்துக்களையே அதிகரித்துச் செய்வதாக இருக்கும். 

ஆகவே, பேதங்களுக்கு அப்பால், இந்த விடயங்களை கையாள்வதற்காக பொதுவானதொரு கட்டமைப்பாக செயற்படுவதற்கு அனைத்து தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகளும் முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. 

நன்றி : வீரகேசரி

0/Post a Comment/Comments