இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு'உதவும் மனிதம்' என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை எண்ணி அகம் மகிழ்ந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை வழங்குவதற்கு இலங்கை அரசின் அனுமதியை பெற்றுத்தருமாறு தமிழக திரை நடிகர் சே. லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி) கடற்றொழில் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான
தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும்
மறுபடியும் உயிர் கொடுத்துள்ளது.
நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் 'உதவும் மனிதம்' வெளிப்படுத்தியுள்ளது.
தமிழர்கள், இந்தியர்கள் என இரு அடையாளங்களையும் ஒன்றாக கொண்டிருக்கும் தமிழக மக்களை போலவே நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ, தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ நாம் ஒரு போதும் இழந்துவிட முடியாதவர்கள்.
பேசும் மொழியாலும் கலை கலாச்சார பண்பாட்டு உணர்வுகளாலும் இணையும் எங்கள் உறவுகள் நீடித்து வளரட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்
கொண்டு வர நான் ஆவன செய்கிறேன். நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம் எனவும் அமைச்சர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக