பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் - நீதியமைச்சர் அலிசப்ரி அதிரடி அறிவிப்பு!



கொரோனா வைரஸினால் கொழும்பில் உயிரிழந்த முஸ்லிம் நபரது உடலை தகனம் செய்யாமல் நீதியமைச்சர் அலிசப்ரி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா வித்தானனே குற்றஞ்சாட்டியுள்ளார்.


கொழும்பை அண்மித்த இரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 15ஆம் திகதி கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் அவர் நீதியமைச்சரின் உறவினர் என்பதால் நீதியமைச்சரது அழுத்தத்திற்கு மத்தியில் உடல் தகனம் செய்யப்படாமல், அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் மேற்கண்ட தகவல்களை அம்பலப்படுத்தினார்.


தொடர்ந்து உரையாற்றிய 

ஹேசா வித்தானகே எம்.பி ,


‘நீதியமைச்சரின் உறவினர் ஒருவர் இரத்மலான பிரதேசத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருந்தார். அஹமட் யுனைதீன் நலீபா என்கிற பெண் நவம்பர் 15ஆம் திகதி உயிரிழந்தவுடன் பிரதேச சுகாதார பரிசோதகர்கள் அவரது உடலை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பின் நடத்திய பி.சி.ஆர் பரிசோனையின்போது தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மீண்டும் பி.சி.ஆர் செய்யும்படி உயரிடத்திலிருந்து அழைப்பு எடுக்கப்பட்டு கூறப்பட்டுள்ளது. நீதியமைச்சரின் உறவினர் என்பதால் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியதை தொடர்ந்து உடல் சட்டத்தின்படி தனகம் செய்யப்படாமல் நீதியமைச்சரின் உறவினர் என்பதால் புதைக்கப்பட்டது. நீதியமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு செய்துள்ளார்” என்றார்.


எனினும் இந்தக் குற்றச்சாட்டை அடியோடு நிராகரிப்பதாக நீதியமைச்சர் அலிசப்ரி சபையில் இன்று தெரிவித்தார்.


தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட நீதியமைச்சர், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் உடனடியாக நீதியமைச்சர் பதவியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குச் செல்வதாக சூளுரைத்தார்.

0/Post a Comment/Comments