உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இருந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா் காயம் காரணமாக விலகியுள்ளாா்.
2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் பிரேசில் அணி, உருகுவே அணியுடன் அடுத்த வாரம் மோதுகிறது. இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மா் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உருகுவேக்கு எதிரான தகுதிச்சுற்றில் இருந்து விலகியுள்ளாா். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மைன் அணிக்காக விளையாடியபோது நெய்மருக்கு காயம் ஏற்பட்டது.
இதுதொடா்பாக பிரேசில் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பிரேசில்-உருகுவே இடையிலான தென் அமெரிக்க தகுதிச்சுற்றில் நெய்மா் விளையாடமாட்டாா்’ என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து பிரேசில் அணியில் நெய்மருக்குப் பதிலாக பெட்ரோ சோ்க்கப்பட்டுள்ளாா்.
பெட்ரோ 2018, செப்டம்பரில் பிரேசில் அணிக்காக தோ்வு செய்யப்பட்டாா். ஆனால், முழங்கால் பிரச்னை காரணமாக அறிமுக ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தாா். அதன்பிறகு இப்போது பிரேசில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளாா்.
பிரேசில் அணியின் பின்கள வீரரான மெனினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் வெனிசுலா மற்றும் உருகுவே அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளாா்.
கருத்துரையிடுக